ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானின் புதிய முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்றுள்ளார். அந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் திட்டத்தை ஒரு “அழகான விஷயம்” என்று அவர் வர்ணித்துள்ளார்.
மேலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இரு நாடுகளும் இணைந்து இந்த சுங்கக் கட்டண நடைமுறையை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், இது கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு வழியாக அமையும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனால் முன்னதாக, ஹார்மூஸ் ஜலசந்தியைத் திறக்கக் கோரி ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தது. இந்தச் சூழலில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருவேளை ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படவில்லை என்றால் கடுமையான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுங்கக் கட்டண வசூலிப்பு விவகாரத்தில் டிரம்ப் காட்டியுள்ள இணக்கமான போக்கு மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
