ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பங்கு குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தப் போர் நிறுத்தத்தில் பாகிஸ்தான் ஒரு சுதந்திரமான மத்தியஸ்தராகச் செயல்படவில்லை என்றும், முழுக்க முழுக்க அமெரிக்காவின் கட்டளைப்படியே ‘கைப்பாவையாக’ இயங்கியுள்ளதாகவும் மூன்று முக்கிய ஊடக அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரிகள் பாகிஸ்தான் மூலம் ஈரானுக்கு ரகசியத் தூது அனுப்பியுள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவைக்கூட வெள்ளை மாளிகையே தயார் செய்து கொடுத்தது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானை இந்தப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதிக்க வைக்க பாகிஸ்தான் சீனாவின் உதவியை நாடியதும், சீனாவின் தலையீட்டிற்குப் பிறகே ஈரான் இணங்கியதும் தெரியவந்துள்ளது.
வரும் சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானிய சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் கலந்துகொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்தாலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டி அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் நிழலில் நின்று பாகிஸ்தான் ஆடும் இந்த இராஜதந்திர ஆட்டம், ஈரானுக்குச் செய்யப்பட்ட துரோகமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
