ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி ஹன்ஸ்ராம், கொலை செய்யப்பட்டு உடல் பீப்பாயில் அடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஹன்ஸ்ராமின் மனைவி சுனிதா, அவர்களின் மூன்று குழந்தைகள் மற்றும் வீட்டு உரிமையாளரின் மகனான ஜிதேந்திரா ஆகியோர் மாயமாகியிருந்தனர்.
இதனால், கொலைக்கு இவர்களுக்கே தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து தேடுதல் நடத்தினர். ஹன்ஸ்ராமின் கழுத்து அறுக்கப்பட்டிருப்பது கொலைக்கான சாட்சியமாக அமைந்தது.

பின்னர் சுனிதா மற்றும் ஜிதேந்திரா போலீசாரால் சிக்கினர். விசாரணையில், இருவரும் முரண்பட்ட பதில்கள் அளித்த நிலையில் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஹன்ஸ்ராம், ஜிதேந்திராவின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்துள்ளார்.
அப்போது ஜிதேந்திரா, சுனிதாவுடன் நெருக்கம் காட்டி கள்ளத் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். இருவரும் வெளியில் சென்று உல்லாசமாக இருந்து, ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்ததாகவும் தெரியவந்தது. இந்த உறவுக்குத் தடையாக இருந்த ஹன்ஸ்ராமை அகற்றுவதற்காகவே இருவரும் திட்டமிட்டு கொலை செய்தனர்.

கோகுலாஷ்டமி கொண்டாட்டத்திற்காக அக்கம்பக்கத்தினர் கோவில்களுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஜோடி, ஹன்ஸ்ராமை மது குடிக்கச் செய்து, அவர் போதையில் இருந்தபோது கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடலை நீல நிற பீப்பாயில் அடைத்து அதில் உப்பு கொட்டினர்.
அதன் பின் பீப்பாயை வீட்டின் மேல்கூரையில் மறைத்து விட்டு தப்பிச் சென்றனர். விசாரணையில் வெளிப்பட்ட இந்த அதிர்ச்சி தகவல்களை போலீசார் உறுதிப்படுத்தியதோடு, சுனிதா தனது குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது கள்ளக்காதல் ஜோடி இருவரும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
