கேரளாவின் வயநாடு மாவட்டம், சுல்தான்பத்தேரி தாலுகாவில் உள்ள சேக்காடி பகுதியில், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்டிருந்த அகழி, தொடர் கனமழையால் மண்ணால் நிரம்பியது.
இதனால், பிறந்து 20 நாட்களே ஆன ஒரு குட்டி யானை அகழியில் சிக்கிக் கொண்டது. தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக விரைந்து சென்று குட்டியை மீட்டு, அருகே உள்ள வனப்பகுதியில் நின்றிருந்த தாய் யானையுடன் பல முயற்சிகளுக்குப் பின் சேர்த்தனர். ஆனால், இந்த சம்பவத்தை அடுத்து மற்றொரு எதிர்பாராத நிகழ்வு அரங்கேறியது.
View this post on Instagram
அதாவது சேக்காடி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த குட்டி யானை பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தது. இதைக் கண்ட மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
வகுப்பறைகளுக்குள் யானை நுழையாமல் இருக்க, உடனடியாக கதவுகள் மூடப்பட்டன. இருப்பினும், குட்டி யானை பள்ளியின் வரண்டாவில் ஓடியது, பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் மீண்டும் விரைந்து வந்து, வலையைப் பயன்படுத்தி குட்டி யானையைப் பிடித்து ஜீப்பில் ஏற்றி வனப்பகுதிக்குக் கொண்டு சென்றனர். தற்போது, தாய் யானையைத் தேடி, குட்டியை அதனுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
