ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சந்தோஷ் தேவி, அங்குள்ள பெட்ஷீட் தயாரிப்பு ஆலையில் வேலை செய்து வந்தார். அவரது கணவர் மனோஜ், இ-ரிக்ஷா ஓட்டி வந்தார். மனோஜ் தொடர்ந்து சந்தோஷ் தேவியை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த தேவிக்கு தொழிற்சாலையில் பணியாற்றிய ரிஷி ஸ்ரீவத்ஸவா என்ற இளைஞருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களது நட்பு கள்ளத்தொடர்பாக மாறிய நிலையில், தேவிக்கு ஏற்பட்ட சித்ரவதையை முடிவுக்கு கொண்டு வர, இருவரும் சேர்ந்து மனோஜை கொலை செய்ய திட்டமிட்டனர்.
கொலை செய்வது எப்படி என்று முதலில் இருவரும் கூகுளில் தேடியுள்ளனர். ஆனால் தேவையான தகவல்கள் கிடைக்காததால், கிரைம் வெப் சீரிஸ்களை பார்த்து அதிலிருந்து யோசனைகளை எடுத்து திட்டமிட்டுள்ளனர். திட்டப்படி, ரிஷி, மனோஜை இ-ரிக்ஷாவில் வாடகைக்கு அழைத்து சென்றார்.
செல்லும் வழியில், ரிஷியின் நண்பர் மோகித் சர்மாவும் அதே வாகனத்தில் ஏறினார். பின்னர் மனோஜை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற இருவரும், முன்கூட்டியே திட்டமிட்டபடி கழுத்தறுத்து கொலை செய்தனர்.
கொலைக்குப் பிறகு, குற்றவாளிகள் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டு, சிம் கார்டுகளை அழித்து எறிந்து வைத்து தடயங்களை மறைக்க முயன்றனர். ஆனால், விசாரணை நடத்திய போலீசார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொலைக்காரர்களை விரைவாக பிடித்தனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், சந்தோஷ் தேவி, தனது காதலர் ரிஷியுடன் இணைந்து கணவரை கொலை செய்ய சதி செய்தது, அதனை நிறைவேற்ற மோகித் சர்மா உதவியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
