மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஊர்லி காஞ்சன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜமீர் சேக் மற்றும் தஸ்லீம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். கடந்த 15-ம் தேதி தஸ்லீம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தஸ்லீம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் ஜமீர் ஷேக் மற்றும் அவருடைய மகனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் போது ஜமீர் ஷேக் தன்னுடைய மனைவி தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் தான் வீட்டில் இல்லை எனவும் அந்த நேரத்தில் தன்னுடைய மகன் மட்டும் தான் உடன் இருந்தார் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து மகனிடம் நடத்திய விசாரணையில் சம்பவ நாளன்று தஸ்லீன் தன் மகனிடம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக அவர் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் தஸ்லீன் மகனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தன்னுடைய தாயை கீழே தள்ளி விட்டதோடு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு கொலையை மறைப்பதற்காக மின்விசிறியில் தன் தாயை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை போல் நாடகமாடியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சிறுவனை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் ஒரு ஸ்மார்ட் ஃபோனுக்காக தாயையே கொலை செய்த மகனின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.