ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் லோஹாரு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் 2 சடலங்கள் காரில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நசீர் மற்றும் ஜூனைத் என்பது தெரிய வந்தது. இவர்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கடத்தி வந்து காரில் வைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள். அந்த விசாரணையின் போது பஜ்ரங் தள் கட்சியைச் சேர்ந்த லோகேஷ், ரின்கு ஷைனி, ஸ்ரீகாந்த் மற்றும் மோனு‌ மனேசர் ஆகியோருக்கும் உயிரிழந்த இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும் அவர்கள் தான் காரில் கடத்தி வந்து தீ வைத்து எரித்து கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தால் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பஜ்ரங் தள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமும் அறிவித்துள்ளார்.