இந்தியாவில் உள்ள அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் எம். ஜெகதீஷ் குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் உள்ள உயிர் கல்வி நிறுவனங்களில் தாய் மொழியில் கற்றல் மற்றும் கற்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையும் அதைத்தான் வலியுறுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி அந்தந்த மாநிலங்களில் உள்ள தாய் மொழியில் உயர் கல்வி பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.

தற்போது பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்றல் மற்றும் கற்பித்தல் அந்தந்த உள்ளூர் மொழிகளில் நடைபெற்று வருவதால் மாணவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கிறது. ஆனால் உயர் கல்வி படிப்பில் அறிவியல், வணிகவியல் மற்றும் தொழில் படிப்புகளுக்கான பாட புத்தகங்கள் தாய் மொழியில் இல்லை. எனவே மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகங்கள் தாய்மொழியில் அச்சிடப்படுவதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். மேலும் இதன் மூலம் தற்போது உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதம்  27 சதவீதமாக இருக்கும் நிலையில் 2025-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.