தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது நடைப்பயிற்சிக்குப் பிறகு, பழமையான ‘பியட்’ (Fiat) ரக விண்டேஜ் கார் ஒன்றை ஓட்டி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதையும், அவ்வப்போது சென்னை இ.சி.ஆர். சாலையில் மிதிவண்டிப் பயணம் மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இன்றைய இதமான காலைப் பொழுதில் தனது நடைப்பயிற்சியை முடித்த முதல்வர், திடீரென ஒரு பழமையான ‘பியட் செலக்ட்’ (Fiat Select) ரக காரை ஓட்டிப் பார்த்தார்.

சாலையில் அவர் நிதானமாக கார் ஓட்டிச் சென்ற காட்சி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வு குறித்து தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நமது அன்புக்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் எளிமையானவர்; அனைவரிடமும் இயல்பாகப் பழகும் பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற மனிதர். குளிர்கால காலைப் பொழுதில் நடைப்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது போன்ற வாழ்க்கையின் எளிய இன்பங்களை அவர் எப்போதும் விரும்புவார்.

இன்று காலை அவர் அழகான ‘பியட் செலக்ட்’ காரை ஓட்டிச் சென்றார். தலைவருக்கு (முதல்வர்) பியட் கார் என்றால் எப்போதும் ஒரு தனிப்பிரியம் உண்டு.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் முதல்வர் விண்டேஜ் கார் ஓட்டிய இந்த வீடியோ, தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.