திரைப்படத் தணிக்கை என்பது சட்டத்திற்கு உட்பட்டது என்றும், கடந்த காலங்களில் விஜய் போன்ற நடிகர்கள் தங்கள் படங்களுக்காக அதிகாரத்தின் முன் கைகட்டி நின்றதை மறக்கக் கூடாது என்றும் பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சரத்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்று பெறுவதில் நிலவும் சிக்கல்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது: “தணிக்கைக் குழு (Censor Board) தற்போது மட்டும் ஒரு படத்தை நிறுத்தவில்லை. முன்னரே பல்வேறு படங்களுக்கு இது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ‘தக் லைஃப்’ படத்திற்கு கூட இது நடந்தது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், தனது படத்திற்காக விஜய் கைகட்டி சாலையில் நின்றவர் தானே?
இவை அனைத்தும் அரசியல் காரணங்களால் நடப்பதாகக் கருதுவதை மாற்றிக்கொள்ள வேண்டும். தணிக்கைக் குழுவில் அரசியல்வாதிகள் யாரும் உறுப்பினர்களாக இல்லை. ஒரு படம் சரியாக இல்லை என்று அவர்கள் கருதினால் தணிக்கை செய்ய அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. ‘ஜனநாயகன்’ படம் வெளியாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையும் கூட. ஆனால், திரைப்படம் எடுப்பது சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.”
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரின் தலையீடு குறித்த கேள்விக்கு, “அவர்கள் திமுக கூட்டணியில் இருப்பதால், இதைப் பேசித்தான் ஆக வேண்டும். இதன் மூலம் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது,” என சரத்குமார் விமர்சித்தார்.
திரைப்பட விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது என்றும், சட்ட ரீதியான நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியின் போது வலியுறுத்தினார்.
