மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி அமைப்பதற்கு எதிராக, திமுக சார்பில் கரூர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது தவறான முழக்கத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தின் பெயரை மாற்றி புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
https://x.com/i/status/2003760379999264780
இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியுள்ளதோடு, அதன் அடிப்படை கொள்கைகளையும் மாற்ற முயல்வதாக கூறி, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் இதில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, விசிக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முழக்கமிடுகையில், தவறுதலாக “ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கின்றோம்” என்பதற்கு பதிலாக ஸ்டாலின் அரசை கண்டிக்கின்றோம்” என்று முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக திமுக நிர்வாகிகள் அவரிடமிருந்து மைக்கை பிடுங்கி, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த சம்பவம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
