ஈரானின் கார்க் தீவு அருகே கடலில் இரண்டாவது முறையாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 12 முதல் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள இந்த கசிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக மே 8-ம் தேதி ஏற்பட்ட 65 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பெரிய எண்ணெய் கசிவு ஏற்கனவே சவுதி அரேபியாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த இரண்டாவது கசிவு பாரசீக வளைகுடா பகுதியில் பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
மேலும் பழைய குழாய்களில் ஏற்பட்ட சேதம் அல்லது கப்பல்களுக்கு இடையே எண்ணெய் மாற்றும் போது ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த கசிவு ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த எண்ணெய் கசிவு அடுத்த நான்கு நாட்களில் கத்தார் நாட்டின் கடல் எல்லைக்குள்ளும், சுமார் 13 நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் மிர்ஃபா கடற்கரை பகுதியையும் சென்றடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இது குறிப்பாக, இது மக்கள் வசிக்கும் பகுதிகளை நெருங்கினால், கடலில் இருந்து குடிநீர் தயாரிக்கும் ஆலைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என ஐநா நிபுணர் டாக்டர் காவே மதனி எச்சரித்துள்ளார். ஈரானிய அதிகாரிகள் இந்த விபத்திற்கு வெளிநாட்டு கப்பல்களே காரணம் என்று குற்றம் சாட்டினாலும், சர்வதேச தடைகள் காரணமாக ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகளை முறையாக பராமரிக்க முடியாததும் இத்தகைய விபத்துகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
