திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பல்லடம் சாலை மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நாளில் காலை சுமார் 8 மணி அளவில் மேம்பாலத்தில் நடந்து சென்ற அந்த வாலிபர், பேருந்து நிலைய நுழைவு வாயிலின் எதிரே உள்ள மேற்குப்புற பக்கவாட்டு சுவரில் திடீரென ஏறி, கண் இமைக்கும் நேரத்தில் சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் கொடுத்த தகவலின் பேரில், திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
பலியான வாலிபரின் பையில் இருந்த சேதமடைந்த செல்போனிலிருந்து சிம்கார்டை எடுத்து, மற்றொரு போனில் பொருத்தி போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த அப்துல் நாசர் மகன் முகமது பயாஸ் (28) என்பது தெரியவந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூர் வந்த இவர், மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள செருப்புக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து, கோம்பைத்தோட்டம் பகுதியில் சக ஊழியர்களுடன் அறை எடுத்து தங்கி வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவரது தாய் உயிரிழந்த நிலையில், அந்த சோகத்திலிருந்து மன உளைச்சலில் இருந்த முகமது பயாஸ், அதன் காரணமாகவே மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
