அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசா போருக்கு தீர்வு காணும் வகையில் ‘நியூயார்க் பிரகடனம்’ மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த பிரகடனத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன, மேலும் 12 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகின. இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், முந்தைய தீர்மானங்களில் வாக்களிப்பதைத் தவிர்த்து வந்த இந்தியா, இந்த முறை பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க ஆதரவாக வாக்களித்தது.
பல தசாப்தங்களாக இந்தியா இரு-நாடு தீர்வை ஆதரித்து, பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்க முயற்சித்து வந்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கைக் கடைப்பிடித்து வந்தது. இந்நிலையில், இந்தியாவின் இந்த முடிவு இஸ்ரேலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த பிரகடனம், காசாவில் உடனடி போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவித்தல், பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு, செப்டம்பர் 22-ஆம் தேதி உலகத் தலைவர்களின் கூட்டத்தில் மேலும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அங்கு வைத்து பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முன்வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
