ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதை அவர் தற்போது ஒப்புக்கொண்டார். ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இந்தியா ரஷியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக உள்ளது.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன். இது எளிதான முடிவு அல்ல. இது மிகப்பெரிய விஷயம். இதனால் இந்தியாவுடன் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும், அதைச் செய்தேன்” என்று டிரம்ப் தெரிவித்தார். இந்த வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த பேட்டியில், டிரம்ப் மற்றொரு முக்கிய கூற்றையும் மீண்டும் வலியுறுத்தினார். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக அவர் கூறியுள்ளார். இந்த கூற்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிரான அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.