பணி விலகல் அறிவிப்புக் காலத்திலிருந்த (Notice Period) ஊழியர் ஒருவரை, அவரது மேலாளர் அழைத்துத் தனது மகனின் பள்ளிப் பாட வேலைகளை அலுவலக நேரத்தில் செய்து கொடுக்குமாறு கேட்ட விசித்திரச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட இந்தப் பதிவின்படி, ஊழியர் தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டுப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொண்டிருந்தபோது, மேலாளர் அவரைத் தனது அறைக்கு அழைத்துள்ளார்.
அப்போது, ஐஐடி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் தனது 12ஆம் வகுப்பு மகனுக்குத் தேவையான பள்ளிப் பாடப் படங்களை (Diagrams) வரைந்து கொடுக்குமாறு ‘தனிப்பட்ட உதவி’யாகக் கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர், பணியை முடிக்கும்போது “சரியாக வரைகிறீர்களா?” என்று மேலாளர் திரும்பவும் வந்து கேட்டது, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தொழில்முறை வரம்புகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியரிடம், இந்த அளவுக்குத் தனிப்பட்ட உதவியைக் கோருவது மிகவும் மோசமான தொழில்முறையற்ற செயல் என்று பல நெட்டிசன்கள் கண்டித்துள்ளதுடன், “இதுபோன்ற மேலாளர்களிடம் இருந்து விலகி ஓடுங்கள்” என்றும் ஆலோசனை கூறி வருகின்றனர்.
