டெல்லியின் அமர் காலனி பகுதியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரின் 22 வயது மகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த வீட்டில் முன்பு வேலை பார்த்த ராகுல் மீனா என்ற 19 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான ராகுல், கடைகளில் பணத்தைக் கையாடல் செய்ததற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், செவ்வாய்க்கிழமை காலை சிறுமியின் பெற்றோர் நடைப்பயிற்சிக்குச் சென்ற நேரத்தில், தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அங்கு அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, மொபைல் சார்ஜிங் கேபிளால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, வீட்டிலிருந்த 2.5 லட்சம் ரூபாயையும் கொள்ளையடித்துத் தப்பியோடியுள்ளார்.

துவாரகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த ராகுலை, 15 தனிப்படைகள் அமைத்து டெல்லி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், அவர் டெல்லிக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக ராஜஸ்தானின் அல்வாரிலும் ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

கொலை செய்த பிறகு தனது ஆடைகளை மாற்றிவிட்டுத் தப்பிய ராகுல் மீது கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவருக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப் போவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.