பெல்காம்: கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் ஹட்டர்வாடா கிராமத்தில், ஆடை விவகாரத்தில் ஏற்பட்ட அற்பத் தகராறில் கணவன் தனது மனைவியை உயிரோடு தீவைத்து எரிக்க முயன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணாஜி பாட்டீல் மற்றும் மஞ்சுளா பாட்டீல் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், ஆரம்பம் முதலே கிருஷ்ணாஜி தனது மனைவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று வீட்டில் புடவைக்கு பதிலாக ‘கவுன்’ அணிந்திருந்த மஞ்சுளாவிடம் கிருஷ்ணாஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் தலைக்கேறிய அந்த நபர், மஞ்சுளாவை சரமாரியாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காகப் பெல்காம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மஞ்சுளா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வக்கிர குணம் கொண்ட கணவன் கிருஷ்ணாஜி பாட்டீலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ஒரு சாதாரண ஆடை விஷயத்திற்காக மனைவியைக் கொல்ல முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கணவன் கிருஷ்ணாஜி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.