பெங்களூருவைச் சேர்ந்த 37 வயது பெண்ணும், 22 வயது இளைஞரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மைசூரு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சமடைந்தனர். பெங்களூரு சல்லகட்டா பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (37). இவரது கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் தனது அத்தை வீட்டில் தங்கி ஆட்டோ மற்றும் டெம்போ டிராவலர் ஓட்டி வந்த மைசூரு ரமணஹள்ளியைச் சேர்ந்த பாஸ்கர் (22) என்பவருடன் கவிதாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கோயிலுக்கு கவிதா சென்றபோது இந்த நட்பு உருவாகி, கடந்த ஓராண்டாக இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். வீட்டு வேலை செய்து வந்த கவிதா, தனது தந்தையுடன் வசித்து வந்தார். இதற்கிடையில், கவிதாவின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா, தனது 14 வயது மகனைப் பிரிந்து, பாஸ்கருடன் மைசூருக்குச் சென்றார்.
இதற்கிடையில், கவிதாவைக் காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் பாஸ்கர் தனது மகளைக் கடத்திச் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார். எதிர்ப்புகளையும் மீறி, மைசூருவில் உள்ள ஒரு கோயிலில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். தற்போது ரமணஹள்ளியில் வசித்து வரும் இவர்களுக்கு, கவிதாவின் மைத்துனர் கொலை மிரட்டல் விடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
எங்கள் திருமணத்திற்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாகக் கவிதாவின் உறவினர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எங்களுக்குப் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் பாதிப்புக்குள்ளான ஜோடி மைசூரு எஸ்.பி. அலுவலகத்தில் செவ்வாயன்று மனு அளித்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 37 வயதுப் பெண், 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
