மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனின் முன்னாள் காதலி, அவரது மனைவியை வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் சாதனா சோன்பேட்கர் (40). இன்று காலை சாதனா தனது பாட்டியுடன் வீட்டில் இருந்தபோது, ஷைலா சோனார் என்ற பெண் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் திடீரென வீட்டிற்குள் நுழைந்தார்.
சாதனாவின் கணவர் மகேந்திர சோன்பேட்கருக்கும், ஷைலாவிற்கும் இடையே நீண்டகாலமாகத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகேந்திரா மீது ஷைலா பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். இந்நிலையில், மகேந்திரா தன்னைப் புறக்கணிப்பதாகக் கருதி ஆத்திரமடைந்த ஷைலா இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
வீட்டிற்குள் புகுந்த ஷைலா, முதலில் சாதனாவின் தலையில் துப்பாக்கியை வைத்துச் சுட முயன்றார். அப்போது அங்கிருந்த சாதனாவின் முதிய வயது பாட்டி, சற்றும் யோசிக்காமல் பாய்ந்து சென்று ஷைலாவின் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினார். இதனால் துப்பாக்கிச் சூட்டில் இருந்து சாதனா தப்பினார். துப்பாக்கியைப் பறி கொடுத்த பிறகும் ஆத்திரம் குறையாத ஷைலா, தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து சாதனாவைச் சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சாதனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு ஷைலா தன்னை ஒரு அறைக்குள் பூட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்து வந்த போலீசார், கதவை உடைத்துச் சென்று ஷைலாவைத் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றித் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். கணவரின் தவறான உறவால் ஒரு அப்பாவிப் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான நேரத்தில் சாதனாவின் பாட்டி காட்டிய துணிச்சல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
