இந்தியா – நேபாள சர்வதேச எல்லைப் பகுதியான சோனாலி-பெல்ஹியா எல்லையில், நேபாள போலீசார் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வாலிபர் ஒருவரைச் சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள போலீசாரின் பிடியில் இருந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்து தப்பித்து இந்திய எல்லைக்குள் ஓடி வந்துள்ளார்.

அவரை விரட்டி வந்த இரண்டு நேபாள போலீசார், சர்வதேச எல்லை விதிகளை மீறி இந்தியப் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு அந்த வாலிபரைப் பிடித்து, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சாலையில் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துக் கொண்டு மீண்டும் நேபாள எல்லைக்குள் சென்றனர்.

சம்பவம் நடந்த இடத்திற்குச் சற்று தொலைவில் இந்தியப் போலீசார் இருந்தும், அவர்களைப் பொருட்படுத்தாமல் நேபாள போலீசார் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியப் போலீசார் அந்த வாலிபரை எழுந்து நிற்க வைத்த போதிலும், நேபாள போலீசார் அவரை விடாமல் தங்கள் நாட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றனர். இதுகுறித்து சோனாலி காவல் ஆய்வாளர் மகேந்திர மிஸ்ரா கூறுகையில்,

நேபாளத்தின் பெல்ஹியா காவல் நிலையத்திலிருந்து தப்பியோடிய குற்றவாளி ஒருவர் சோனாலி பகுதிக்குள் நுழைந்துள்ளார். அவரைப் பின்தொடர்ந்து நேபாள போலீசாரும் எல்லை தாண்டி வந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

சர்வதேச விதிகளின்படி, ஒரு நாட்டின் போலீஸ் மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்து உரிய அனுமதியின்றி நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. நேபாள போலீசாரின் இந்த அத்துமீறல் மனித உரிமை மீறல் என்றும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், 84 கி.மீ நீளமுள்ள இந்தியா-நேபாள எல்லைப் பகுதி சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முக்கியப் பாதையாக மாறியுள்ளது. மருந்தியல் மாணவர்கள் முதல் உள்ளூர் கும்பல்கள் வரை பலர் இதில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இத்தகைய பதற்றமான சூழலில், நேபாள போலீசாரின் இந்த நடவடிக்கை எல்லையில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.