நிமகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மாவட்டத்தில் மனநலம் மற்றும் குடும்பப் பிரச்சனைகளுக்கு ஆன்மிக சிகிச்சை அளிப்பதாகக் கூறி, 28 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய போலிச் சாமியார் கைது செய்யப்பட்டார். அதாவது நாசிக் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த சில காலமாகத் தீவிர மன உளைச்சலாலும் குடும்பப் பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட மகேஷ் கிரி (எ) மகேஷ் திலீப் காக்டே என்ற போலிச் சாமியார், அந்தப் பெண்ணுக்கு ‘பில்லி சூனியம்’ மற்றும் ‘பேய் பிடித்துள்ளதாக’க் கூறி பயமுறுத்தியுள்ளார்.
இதற்குப் பரிகாரப் பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி, ஒவ்வொரு வியாழக்கிழமையும் அந்தப் பெண்ணைத் தனியாக வரவழைத்துள்ளார். ஆரம்பத்தில் நயமாகப் பேசிய சாமியார், நாளடைவில் அந்தப் பெண்ணின் செல்போனுக்கு ஆபாசச் செய்திகளை அனுப்பி மனரீதியாகத் துன்புறுத்தி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, கடந்த 2024 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, அந்தப் பெண்ணை ஏமாற்றி வரவழைத்த சாமியார், அங்கிருந்து தனது காரில் ஒரு லாட்ஜிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு செல்ல அந்தப் பெண் மறுத்தபோது, தனது கழுத்தில் இருந்த ருத்ராட்சத்தைக் காட்டி, “என்னிடம் தெய்வீக சக்தி உள்ளது, உன்னால் என்னைத் தடுக்க முடியாது” என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், அந்தப் பெண்ணை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்றும், தனக்கு ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் மிரட்டியுள்ளார். ஆதாரங்களை அழிப்பதற்காக அந்தப் பெண்ணின் செல்போனைப் பறித்து, அதிலிருந்த குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களையும் அழித்துள்ளார்.
மிரட்டலுக்குப் பயந்து சில காலம் அமைதியாக இருந்த அந்தப் பெண், பின்னர் துணிச்சலுடன் ‘மகாராஷ்டிர விவேகவாதிகள் மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு குழுவை’ (ANIS) அணுகினார். அவர்களின் உதவியுடன் லாசல்காவ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்தப் போலிச் சாமியாரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் நாசிக் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மூடநம்பிக்கை ஒழிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா சந்த்குடே கூறுகையில்,
மனநலப் பிரச்சனைகளுக்கு மருத்துவ ரீதியான சிகிச்சையை நாட வேண்டுமே தவிர, இதுபோன்ற போலிச் சாமியார்களிடம் சென்று வாழ்க்கையைத் தொலைக்க வேண்டாம். மூடநம்பிக்கைகளுக்குப் பலியாகாமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
