டெல்லியில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்கொன்றை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம், கணவர் வேலையில்லாமல் இருக்கிறார் என்பதைக் காரணம் காட்டி, மனைவியையும் குழந்தையையும் பராமரிக்கும் சட்டப்பூர்வ கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என்று கண்டித்துள்ளது.

கடந்த 2013-ல் திருமணமான தம்பதியினர், வரதட்சணை கொடுமை காரணமாக 2015 முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 2025-ல் பெண்ணின் புகார் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து அந்தப் பெண் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஷீத்தல் சவுத்ரி பிரதான், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி அமைத்து பெண்ணின் மனுவை ஏற்றுக்கொண்டார்.

நீதிமன்றம் தனது உத்தரவில், தன் சொந்தச் செலவுகளைச் சமாளிப்பது கணவனின் பொறுப்பு என்றும், வேலையின்மையைக் காரணம் காட்டி குழந்தையைப் பராமரிக்கும் கடமையில் இருந்து அவர் பின்வாங்க முடியாது என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குழந்தை பிறந்தது முதல் பல வருடங்களாக தாயின் பராமரிப்பில் மட்டுமே வளர்ந்து வருவதையும், தந்தை இதுவரை எந்த ஒரு நிதியுதவியும் செய்யவில்லை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, கணவர் குழந்தைக்குப் பராமரிப்புச் செலவு வழங்கத் தகுதியானவர்தான் என்று முடிவெடுத்த நீதிபதி, அந்த சிறுவன் 18 வயது அடைந்து சட்டப்பூர்வமாகப் பெரியவனாகும் வரை அவனது செலவிற்காக மாதம் ₹6,000 கணவர் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.