உலக வரலாற்றில் முதல்முறையாக, மனிதர் அல்லாமல் செயற்கை நுண்ணறிவு (AI) ஆல் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நபரை அமைச்சராக நியமித்துள்ளது அல்பேனியா. ‘டியல்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த AI அமைச்சர், அல்பேனிய மொழியில் ‘சூரியன்’ என்று பொருள் படுகிறது.

ஜனவரி மாதம் e-Albania தளத்தில் மெய்நிகர் உதவியாளராக அறிமுகமான டியல்லா, தற்போது அரசு அமைச்சரவையின் ஓர் அங்கமாக உயர்த்தப்பட்டுள்ளார். ஊழலை ஒழிப்பதும், குறிப்பாக பொது டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதும் இவரின் முக்கிய பணி என பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.

மே மாத தேர்தலில் வெற்றி பெற்ற பின், தனது புதிய அமைச்சரவையை அறிவித்த ராமா, “டியல்லா உடல் ரீதியாக இல்லாதவர், ஆனால் AI-யால் உருவாக்கப்பட்ட முதல் அமைச்சர். இவரின் பணி அல்பேனியாவை ‘100% ஊழல் இல்லாத நாடாக’ மாற்றுவதாகும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், பொது டெண்டர்களுக்கான அனைத்து முடிவுகளும் இனி டியல்லா மூலமாகவே எடுக்கப்படும் என்றும், அரசுப் பண நிதிகள் அனைத்தும் முழுமையாக வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால், ஊழல் பிரச்சனையால் நீண்டகாலமாக சிக்கியிருக்கும் அல்பேனிய அரசியலில் இது பெரிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான அல்பேனியாவின் முயற்சியில், ஊழல் எதிர்ப்பு முக்கிய நிபந்தனையாக உள்ளது. 2.8 மில்லியன் மக்கள் வாழும் இந்த பால்கன் நாடு, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பல்களின் மையமாக நீண்டகாலமாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், AI அமைச்சராக டியல்லாவின் நியமனம் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாரம்பரிய அல்பேனிய உடையணிந்து, குரல் கட்டளைகளின் மூலம் அரசு சேவைகளை வழங்கும் டியல்லா, இதுவரை 36,600க்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆவணங்களை வழங்கி, 1,000 சேவைகளை நிவர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.