நேபாளத்தில் நடைபெற்று வரும் ஜென் Z ஆர்ப்பாட்டங்களால் இந்திய சுற்றுலாப் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 9 அன்று மாலை காட்மாண்டுவில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 49 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து, பயணிகளிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் 7 முதல் 8 பயணிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பயணிகளிடம் இருந்து செல்போன்கள், பணம், தங்கச் சங்கிலிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பயத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.

பயணிகளுக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டு, இந்திய அரசு மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் 49 பயணிகளும் காட்மாண்டுவில் இருந்து பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது காயமடைந்தவர்கள் டெல்லியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் சுற்றுலாப் பேருந்து இயக்குநர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நேபாளத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்திய அரசு, நேபாள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.