உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பிரதாப்நகர் வட்டத்தில் தேவல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கேதன் லால் (வயது 18). தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர், பக்கத்து கிராமமான கோல்கரைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் கடந்த ஆறு மாதங்களாக நட்பு ரீதியாகப் பழகி வந்துள்ளார். ஆனால், ஒரு தலித் வாலிபர் தங்கள் வீட்டுப் பெண்ணுடன் பழகுவதை அந்தப் பெண்ணின் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர்கள் இருவரும் வெறும் நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று எடுத்துச் சொல்லியும், சாதி வெறியால் கண்மூடிப்போன பெண்ணின் உறவினர்கள் அதை நம்ப மறுத்துள்ளனர். ​இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், அந்தப் பெண்ணை மிரட்டி கேதனுக்கு போன் செய்ய வைத்து, தந்திரமாகத் தங்கள் கிராமத்திற்கு வரவழைத்துள்ளனர். ஆபத்தை அறியாத கேதன், தனது நண்பன் திவாகர் திம்ரியுடன் கோல்கர் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அவர்கள் அங்குச் சென்றடைந்ததும், பெண்ணின் குடும்பத்தினர் இருவரையும் பிடித்து ஒரு அறைக்குள் பூட்டி, தடிகளால் மிருகத்தனமாகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

மறுநாள் திங்கள்கிழமை அதிகாலை, பெண்ணின் தந்தை, கேதனின் தந்தை தன்பால் லாலை போனில் அழைத்து, “உன் மகனின் நிலைமை மோசமாக உள்ளது, வந்து கூட்டிட்டுப் போ” என்று கேஷுவலாகக் கூறியுள்ளார். ​பதறியடித்துக்கொண்டு ஓடிய தன்பால் லால், தனது மகன் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கிடப்பதைக் கண்டு கதறியுள்ளார். உடனடியாக அவரை ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குத் தூக்கிச் சென்றார். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி கேதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த அவரது நண்பர் திவாகர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சாதி வெறிப் படுகொலையால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர். தற்பொழுது போலீசார் கொலைக் குற்றம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப் பதிவு செய்து, யஷ்வீர் சிங் பன்வார் என்ற முக்கியக் குற்றவாளியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.