உத்தரப்பிரதேச மாநலத்தில், குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தால் தனது மனைவி மற்றும் மாமியாரை இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைவார் பகுதியைச் சேர்ந்த அமித் குப்தா என்பவருக்கும் பிரீத்தி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரீத்தி தனது மூன்று வயது மகனுடன் தாய் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார்.

இந்த நிலையில், அதிகாலை வேளையில் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த அமித் குப்தா, அங்கு தூங்கிக்கொண்டிருந்த மனைவி, மாமியார், மாமனார் மற்றும் தனது‌ மூன்று வயது மகன் என அனைவரையும் கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, பிரீத்தி மற்றும் அவரது தாய் சுஷிலா ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாமனார் அந்தூ குப்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வாரணாசிக்கு மாற்றப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், தனது மனைவி வேறொருவருடன் பேசுவதாக அமித் குப்தா சந்தேகப்பட்டதே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பலத்த பதற்றத்தை உருவாக்கியுள்ளது.