ஹரியானா மாநிலம் தாத்ரி பகுதியில், ஒன்றரை கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக, தனது கணவரையே லாரி ஏற்றி கொல்ல முயன்ற பெண்ணின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காதலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
தாத்ரி பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் மனைவி அன்னு. இவருக்கு முகேஷ் என்ற இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது கணவரின் பெயரில் கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா ரூ.60 லட்சம் மதிப்பிலான இரண்டு காப்பீட்டு பாலிசிகளை அன்னு எடுத்துள்ளார். கணவரை விபத்தில் கொன்றுவிட்டு, அந்தப் பணத்தையும் சொத்துகளையும் அபகரிக்க அன்னு திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவரைத் தீர்த்துக்கட்ட அன்னு மற்றும் அவரது காதலர் முகேஷ் ஆகியோர் சேர்ந்து கூலிப்படைக்கு ரூ.20 லட்சம் பேரம் பேசியுள்ளனர். கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி, ஒரு வேலையாகச் செல்லுமாறு கூறி தனது கணவரிடம் ஸ்கூட்டியைக் கொடுத்து முகேஷுடன் அனுப்பி வைத்துள்ளார் அன்னு. திட்டமிட்டபடி, வழியில் வந்த ஒரு வாகனம் பிரதீப்பின் ஸ்கூட்டி மீது மோதி அவரை நசுக்க முயன்றது. இதில் பலத்த காயமடைந்த பிரதீப் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் இது சாதாரண விபத்து என்று கருதப்பட்ட நிலையில், பிரதீப்பின் சகோதரி சோனுவுக்கு அன்னுவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அன்னு திடீரென எடுத்த காப்பீட்டு பாலிசிகள் மற்றும் குடும்பச் சொத்துக்களின் மீது வாங்கிய கடன்கள் குறித்து சோனு போலீசாரிடம் முறையிட்டார்.
சோனுவின் புகாரின் பேரில், விபத்தின் போது உடன் இருந்த முகேஷைப் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அன்னுவுடன் சேர்ந்து தீட்டிய கொலைச் சதித் திட்டத்தை முகேஷ் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து முகேஷைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி அன்னு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மற்ற மூவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பணத்திற்காகக் கணவரையே கொல்லத் துணிந்த மனைவியின் இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
