திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்களில் அளவுக்கு அதிகமான சத்தத்துடன் டிஜே இசை அமைப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த அதீத ஒலி அதிர்வு மற்றவர்களுக்கு எந்த அளவுக்குப் பாதிப்பையும் சேதாரத்தையும் ஏற்படுத்தும் என்பதைக் காட்டும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மருந்தகத்தின் வெளியே உரத்த சத்தத்துடன் டிஜே இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது அந்த இசையின் கடுமையான அதிர்வினால், மருந்தகத்தின் அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்த மருந்து பாட்டில்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாகத் தரையில் விழுந்து நொறுங்கத் தொடங்கின.
மருந்தகத்தின் உரிமையாளர் தனது நாற்காலியில் அமைதியாக அமர்ந்தபடி, பொருட்கள் சேதமாவதைக் கண்டும் ஏதும் செய்ய முடியாமல் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. டிஜே சத்தத்தை எதிர்த்துக் கேள்வி கேட்டால் தங்களது கடையைத் தாக்கி விடுவார்களோ என்ற பயத்தினாலேயே அவர் அமைதியாக இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் தெருவில் மக்கள் அந்த டிஜே இசைக் கேற்ப நடனமாடிக் கொண்டிருக்க, மறுபுறம் கடையில் உள்ள தொழிலாளி தனது உடைமைகள் சேதமாவதை அமைதியாகச் சகித்துக் கொண்டிருக்கும் இந்த முரண்பாடான காட்சி இணையவாசிகளின் மனதை நெகிழ வைத்துள்ளது.
A shopkeeper sits as products inside his shop keep falling due to the blasting bass of a DJ playing outside. pic.twitter.com/lIgOHAsemk — Ghar Ke Kalesh (@gharkekalesh) August 23, 2026 “>
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பலரும் தங்களது கோபத்தைப் பதிவிட்டு வருகின்றனர். பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இயக்கப்படும் இதுபோன்ற அதிக திறன் கொண்ட டிஜே இசை அமைப்புகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் அல்லது முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
