மகாராஷ்டிராவில் மொழி மற்றும் மாநில மக்கள் உரிமைகள் குறித்த சர்ச்சை மீண்டும் வெடித்துள்ள நிலையில், ரயில்வே கேன்டீன் ஒன்றில் வடமாநிலப் புலம்பெயர்ந்த இளைஞர் ஒருவர் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலான அந்தக் காணொளியில் போஜ்புரி மொழியில் பேசும் அந்த இளைஞர், “மகாராஷ்டிராவைச் சேர்ந்த மராத்தி மக்களுக்கு உணவு வழங்கக் கூடாது” என்றும், “ரயில்வே கேன்டீனில் உணவு வேண்டும் என்றால் போஜ்புரியில் பேசினால் மட்டுமே வழங்கப்படும்” என்றும் ஆணவமாகப் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், சிவசேனா நிறுவனரான மறைந்த பாலசாஹேப் தாக்கரே குறித்துப் பேசும் அவர், பாலசாஹேப் தாக்கரே ‘இந்து ஹிருதய சாம்ராட்’ ஆ அல்லது ‘மராத்தி சாம்ராட்’ ஆ எனக் கேள்வி எழுப்புகிறார். அதோடு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோரைக் குறிப்பிட்டு, ஒரு மராத்தி தலைவர் ஏன் தேர்தலில் வெற்றி பெறுவதில்லை என்றும் நேரடியாகக் கேள்விகளை எழுப்புகிறார்.
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, மராத்தி மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே கடுமையான கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. இருப்பினும், இந்த விடியோ எங்கு, எப்போது படமாக்கப்பட்டது மற்றும் அந்த இளைஞரின் பின்னணி என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளன.
தற்போது இந்த விடியோ மகாராஷ்டிராவின் அரசியல் மற்றும் சமூக சூழலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளியின் இந்த பேச்சுக்கு இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உள்ளூர் மொழி மற்றும் உரிமை சார்ந்த சர்ச்சைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
