கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள காவேரி வனப்பகுதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் கடுமையான அதிர்வலைகளைச் சந்தித்தது. சாக்கியா கிராமத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய என்கவுண்ட்டரில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறையினர் தரப்பில் கூறப்பட்டாலும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒரு புதிய திருப்பமாக உயிரிழந்த மூன்று பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வழக்கின் போக்கையே மாற்றுவதோடு, பலத்த சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, பலியான செபஸ்டின் டேவிட் குமாரின் உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டுகள் வெகு அருகில் இருந்து சுடப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. அவரது நெஞ்சு, தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் குண்டுகள் துளைத்ததற்கான தடையங்கள் உள்ளன. மேலும், அவரது உடலில் கடுமையான உள்காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களின் அளவும், உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்களின் அளவும் சரியாகப் பொருந்துவதால், தற்காப்புக்காகத் தூரத்தில் இருந்து சுடப்பட்டதாகக் கூறப்படும் வாதத்தை இந்த அறிக்கை கேள்விக்குள்ளாக்குகிறது. இவர்களை மிக அருகில் இருந்து குறிபார்த்து சுட்டிருக்கலாமா என்ற கோணத்தில் தற்போது விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த வழக்கில் மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலாக, பலியான மூன்று பேரின் உடல்களிலுமே சுமார் 8.5 சென்டி மீட்டர் அகலமும், 6 சென்டி மீட்டர் ஆழமும் கொண்ட விசித்திரமான காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய பெரிய மற்றும் ஆழமான காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவான தகவலும் இல்லை.
வனத்துறையினரின் நடவடிக்கையைச் சுற்றியுள்ள இந்த மர்மங்களும், பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்துள்ள உண்மைகளும் இந்த என்கவுண்ட்டர் வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. சாம்ராஜ்நகர் மாவட்ட உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை மேலும் முடுக்கிவிட்டுள்ளனர். உண்மை விரைவில் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் பொதுமக்களும் காத்துக்ள்ளனர்.
