புனே மாவட்டம் பிம்பிரி சிஞ்ச்வாட் அருகே உள்ள காலேவாடி பகுதியில், தண்ணீர் குழாய்க்குள் சிக்கித் தவித்த 65 வயது மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ளனர். அதாவது ஸ்மிதா பாகவத் காசாரே (65) என்ற மூதாட்டியின் கால், இன்று மதியம் எதிர்பாராதவிதமாக அங்குள்ள தண்ணீர் விநியோக வால்வுக்கான குழாய்க்குள் சிக்கிக்கொண்டது. சுமார் 200 மி.மீ அகலமும், 5 அடி ஆழமும் கொண்ட அந்தப் பிவிசி குழாய்க்குள் அவரது கால் முழங்கால் வரை உள்ளே சென்று சிக்கிக்கொண்டது. கால் உட்புறமாகத் திரும்பியதால், அவரால் சுயமாக வெளியே வர முடியாமல் போனது.
पिंपरी अग्निशमन दलाची यशस्वी मोहीम, काळेवाडीत पाईपमध्ये अडकलेल्या वृद्ध महिलेची सुरक्षित सुटका pic.twitter.com/8BwKykBlRU
— VIRALबाबा (@viralmedia70) May 13, 2026
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், மீட்புப் பணியில் இறங்கினர். குழாயைச் சுற்றியுள்ள நிலத்தைத் தோண்டும்போது, அங்கிருந்த எரிவாயு குழாய்கள் (Gas Pipelines) மற்றும் மின்சார கேபிள்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். பேட்டரி மற்றும் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயங்கும் நவீன கட்டர் கருவிகளைப் பயன்படுத்தி, மிகக் கவனமாக குழாயை அறுத்து மூதாட்டியின் காலை வெளியே எடுத்தனர்.
மீட்புப் பணி நடந்த இரண்டு மணி நேரமும் பெண் தீயணைப்பு வீரர்கள் அந்த மூதாட்டியுடன் தொடர்ந்து பேசி, அவருக்குத் தைரியம் அளித்தனர். அவர் மயக்கமடையாமல் இருக்கத் தண்ணீர் கொடுத்துக் கண்காணித்தனர். காவல்துறை மற்றும் குடிநீர் விநியோகத் துறையினரும் இந்த மீட்புப் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். எந்தவிதக் காயமும் இன்றி மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டதைக் கண்ட அப்பகுதி மக்கள், தீயணைப்பு வீரர்களின் சமயோசித புத்தியையும், திறமையையும் கைதட்டிப் பாராட்டினர். தற்போது மூதாட்டி நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
