உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கவும், டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work From Home) செய்யும் புதிய நடைமுறையை முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று, டெல்லி அரசு ‘எனது இந்தியா, எனது பங்களிப்பு’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் அமலுக்கு வருகின்றன.
அதன்படி அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும். அரசுத் துறைகளின் 50 சதவீத அலுவல் கூட்டங்கள் இனி கட்டாயமாக இணையவழியில் மட்டுமே நடத்தப்படும். ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் ஒதுக்கீட்டில் 20 சதவீதம் உடனடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், திங்கள்கிழமைகளில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்களது பயணங்களுக்கு அரசு வாகனங்களைத் தவிர்த்து, டெல்லி மெட்ரோ ரயிலைப் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் எரிபொருள் இறக்குமதியைக் குறைத்து, அதன் மூலம் சேமிக்கப்படும் நிதியை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
