நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூடக் கிடைக்கவில்லை என்றும், அதனால் இனி வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்த ஒரு வேலையையும் செய்யப் போவதில்லை என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரிதேஷ் திவாரி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரிதேஷ் திவாரி, பாஜகவின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

“பாபா பத்ரிநாத்தை சாட்சியாக வைத்துச் சொல்கிறேன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முஸ்லிம்களுக்கு நான் எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டேன். அவர்களுக்கு ஒரு சான்றிதழில் கூட நான் கையெழுத்திட மாட்டேன். எனக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமே என் மீது உரிமை உண்டு. எனக்கு ஓட்டுப் போடாதவர்களின் வீட்டிற்கு நான் வாக்குக் கேட்கக் கூடச் செல்லவில்லை.

 

தொடர்ந்து பேசிய அவர், “1952-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொகுதியில் ஒரு முஸ்லிம் வாக்கு கூட இல்லாமல் வெற்றி பெற்ற முதல் வேட்பாளர் நானாகத்தான் இருப்பேன். இதை நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், இது நேரலையிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்றார். தனது நிலைப்பாடு குறித்து மேலும் விளக்கமளித்த அவர், தான் வன்முறையிலோ அல்லது யாரையும் கட்டாயப்படுத்தும் செயல்களிலோ ஈடுபடப் போவதில்லை என்றும், தனது இந்த நடவடிக்கை முற்றிலும் “ஜனநாயக ரீதியானது” என்றும் தெரிவித்தார்.

2026 வங்கதேச எல்லைப்பகுதி தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் கொல்கத்தா மாநகராட்சி துணை மேயருமான வேட்பாளரைத் தோற்கடித்து, 68,368 வாக்குகள் பெற்று ரிதேஷ் திவாரி வெற்றி பெற்றார். வெற்றிக்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.