தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது உறுதி என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தரப்பிலிருந்து அமைச்சரவையில் பங்கேற்குமாறு காங்கிரஸிற்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் காங்கிரஸ் தரப்பில் எத்தனை அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்பது குறித்து தற்போது விரிவான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். இது தொடர்பாக இறுதி முடிவுகளை முதலமைச்சர் விஜய் எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மற்றும் அதிமுகவில் ஒரு பிரிவினர் ஆதரவு கொடுத்தனர். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த உடனையே கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று முதலமைச்சர் விஜய் அதிரடியாக அறிவித்திருந்தார்.

அந்த வகையில் திமுக கூட்டணியில் இருந்து விலகியதால் காங்கிரஸ் கட்சி தற்போது தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் பங்கு பெற உள்ளது. மேலும் இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் பங்கேற்க தற்போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் விரைவில் அமைச்சர்கள் யார் யார் எந்தெந்த துறைகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் என்ற முழு விவரம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.