தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசால் ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அரசு சாதாரண மாநகர மற்றும் நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். இத்திட்டம் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாகச் சமூக வலைதளங்களில் சில நாட்களாகத் தவறான தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. இது பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் (Fact Check) இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா சேவை நிறுத்தப்பட்டதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. இது தொடர்பாக அரசு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று (14.05.2026) அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயணச்சீட்டின் புகைப்படத்தையும் அரசு ஆதாரமாக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டம் தடையின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்தத் தெளிவான விளக்கம், சமூக வலைதளங்களில் பரவி வந்த தேவையற்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.