வெறும் ₹19,000 செலவில் தயாரிக்கப்பட்ட ஒரு சுயாதீன அனிமேஷன் திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் ₹60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, முதலீடு செய்த தொகையை விட 30,000 மடங்கு லாபத்தைப் பெற்றுத் தந்துள்ள சம்பவம் உலக திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பெரிய நடிகர்கள், பிரம்மாண்டமான செட்கள் அல்லது பல நூறு கோடி பட்ஜெட் இருந்தால் மட்டுமே சினிமா துறையில் வெற்றி பெற முடியும் என்ற பல வருடப் பொதுவான பார்வையை உடைத்தெறிந்துள்ள இந்த வெற்றி, படைப்பாற்றலும் திறமையும் இருந்தால் எந்தவொரு சிறிய படைப்பும் உலகளவில் வரலாற்றுச் சாதனை படைக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஒரு சுயாதீன அனிமேஷன் கலைஞர் தனது சுமார் 5 ஆண்டுகால உழைப்பில், மிகக் குறைந்த செலவில் தனியாளாக உருவாக்கி வெளியிட்ட ‘நியூ லாய்’ என்ற அனிமேஷன் திரைப்படமே இந்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தமான படைப்பாகும்.
இந்நிலையில் சொந்தமாக உருவாக்கிய மென்பொருள்கள் மற்றும் எளிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, தனது சொந்த முயற்சியில் மட்டுமே படத்தை உருவாக்கிய அவர், இணையம் மூலமாக அதை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
தொடக்கத்தில் எவ்வித விளம்பரமும் இல்லாமல் வெளியான இந்தத் திரைப்படம், கதையின் தனித்துவத்தாலும் அனிமேஷன் தரத்தாலும் பார்வையாளர்களைக் கவர்ந்து, சமூக வலைதளங்களில் ‘மௌத் டாக்’ மூலமாக அதிவேகமாகப் பரவியது. திரையரங்குகளில் வெளியான பிறகு பார்வையாளர்களின் கூட்டம் அலைமோதியதால், இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து, உலகளவில் சுமார் ₹60 கோடியைத் தாண்டி வசூல் மழை பொழிந்தது.
இந்திய மதிப்பில் வெறும் ₹19,000 முதலீட்டில் உருவான ஒரு திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் 30,000 மடங்குக்கு மேல் லாபத்தை ஈட்டிக் கொடுத்திருப்பது உலக அனிமேஷன் வரலாற்றிலேயே மிக அரிதான ஒரு நிகழ்வாகும். பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பெரிய முதலீடுகளுக்கு மத்தியில், இந்த எளிய படைப்பாளியின் வெற்றி உலகெங்கிலும் உள்ள சுயாதீன திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.
