தெலுங்கானா மாநிலத்தில், வெறும் 10 ரூபாய் குழம்புக்காக நடந்த மோதல் ரத்தக் களரியில் முடிந்துள்ளது. அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவர், அங்கிருந்த உணவகம் ஒன்றில் 10 ரூபாய்க்கு குழம்பு கேட்டுள்ளார். ஆனால், கடையிலிருந்த ஊழியர்களான உதய் மற்றும் அஜய் ஆகிய சகோதரர்கள், குறைந்தபட்ச விலையே 20 ரூபாய் தான் என்று கூறி குழம்பு தர மறுத்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜீவரத்தினம், ஊழியர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார் சிறிது நேரத்திற்குப் பிறகு, மறைத்து வைத்திருந்த பெரிய வாளுடன் மீண்டும் கடைக்கு வந்த ஜீவரத்தினம், ஊழியர்கள் தப்பி ஓடாதவாறு கடையின் ஷட்டரை மூடிவிட்டு வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக இரு சகோதரர்களையும் வாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அவர்கள் உயிருக்கு பயந்து கெஞ்சிய போதிலும் கொடூரமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த ஊழியர்களின் புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார் தலைமறைவாக உள்ள ஜீவரத்தினத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.