கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், திருடர்களிடம் இருந்து தப்பிக்கப் புத்தகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்ட 6 சவரன் தங்க நகை, பழைய பேப்பர் கடைக்குச் சென்றதும், அங்கிருந்தவர்களின் நேர்மையால் அது மீண்டும் மீட்கப்பட்டதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவலக்கரை பகுதியைச் சேர்ந்த உம்மர் குட்டி மனைவியின் 6 சவரன் நகைகள் திருடு போய்விடக் கூடாது என்பதற்காகப் பழைய பாடப்புத்தகங்களுக்கு இடையே ஒரு டப்பாவில் வைத்துப் பாதுகாத்து வந்துள்ளார். ஆனால், இது தெரியாத உம்மர் குட்டி, கடந்த 21-ம் தேதி வீட்டில் இருந்த பழைய பேப்பர் மற்றும் புத்தகங்களை எடைக்கு விற்றுவிட்டார்.
இரண்டு நாட்கள் கழித்து நகையைத் தேடிய போதுதான் அது பழைய இரும்புக்கடைக்குச் சென்றது தெரியவந்தது. உடனடியாக கடைக்குச் சென்று விவரத்தைச் சொல்ல, கடை உரிமையாளர் நிசார் மற்றும் அங்கிருந்த தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைத் தள்ளிவைத்து விட்டு, குவித்து வைக்கப்பட்டிருந்த டன் கணக்கிலான பழைய பொருட்களுக்கு இடையே தீவிரமாகத் தேடினர்.
பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, சிதறிக் கிடந்த கம்மல், வளையல் மற்றும் புத்தகத்திற்குள் இருந்த மாலை எனப் பெரும்பாலான நகைகள் மீட்கப்பட்டன.
சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த பழைய இரும்புக்கடை ஊழியர்களைப் போலீஸார் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
