உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலா பகுதியில், சடலங்கள் எரிக்கப்படும் மயானத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் திருமணச் சடங்குகளை நடத்திய விசித்திரமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ராமகங்கா மற்றும் பதன்காட் ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த மயானத்தின் இயற்கை அழகால் கவரப்பட்ட மணமக்கள், அங்கேயே திருமண மேடையை அமைத்து மாலை மாற்றிக்கொண்டு ஏழு சுற்றுக்கள் சுற்றி வந்துள்ளனர். இது ஒரு மயானம் என்று தங்குமிட மேலாளர் முன்கூட்டியே எச்சரித்த போதிலும், அந்த தம்பதியினர் அந்த இடத்தின் அழகிற்காக மத நம்பிக்கைகளையும் சமூக மரபுகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த திருமண நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். புனிதமான நதிக்கரைகளிலும், குறிப்பாக இறுதிச் சடங்குகள் நடக்கும் மயானங்களிலும் சுப காரியங்களை நடத்துவது இந்து தர்மத்திற்கும், மலைப்பகுதி கலாச்சாரத்திற்கும் எதிரானது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது ஒரு பொது இடத்தில் நடத்தப்பட்ட அத்துமீறல் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி மயானத்தில் தனியார் விழா நடத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.