மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று காலை எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள ‘டம்வெயிட்டர்’ (Dumbwaiter) எனப்படும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்லும் சிறிய வகை லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்ததில், அங்கு பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காலை 9 மணி அளவில் தனது பணியில் இருந்தபோது, லிஃப்ட் வராததைக் கண்டு அதன் நிலையை அறிய அவர் எட்டிப் பார்த்ததாகத் தெரிகிறது.

அப்போது, எதிர்பாராத விதமாக மேலிருந்து அதிவேகமாக இறங்கிய லிஃப்ட், அவரது கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பயங்கரமாக மோதியது.

இதில் சிக்கித் தவித்த அவர் கைகளை அசைத்து உதவி கோரியும், பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.