பொதுவாகக் குளிர்ச்சியான மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய ஆப்பிள் பழங்களை, வறண்ட நிலத்திலும் சாகுபடி செய்ய முடியும் என்பதை ஆந்திர விவசாயி ரமண ரெட்டி நிரூபித்துக் காட்டியுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், இஸ்ரேல் நாட்டில் இருந்து வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ‘கே.எல்.டி’ என்ற நவீன ரக ஆப்பிள் கன்றுகளைத் தனது 2.5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டார்.
குளிர் பிரதேசங்களில் ஆப்பிள் காய்க்க 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த ரக மரங்கள் இரண்டே ஆண்டுகளில் பலன் கொடுக்கத் தொடங்கியுள்ளன. தற்போது ஒரு டன் ஆப்பிள்களை அறுவடை செய்து சாதனை படைத்துள்ள ரமண ரெட்டி, அவற்றை நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.
இதைப் பார்த்த ஆந்திர தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், தற்போது சில பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் ஆப்பிள் சாகுபடியை ஊக்குவித்து வருகின்றனர். தமிழக அதிகாரிகளும் இந்த முறையை ஆய்வு செய்து, தமிழகத்தின் வறண்ட பகுதிகளிலும் ஆப்பிள் விவசாயத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
