கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சந்தே மைதானம் அருகே விக்ரம் சௌத்ரி என்பவர் மொபைல் கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை அன்று இவரது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், ஏற்கனவே வாங்கிய ஸ்கிரீன் கார்டை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு விக்ரம் சௌத்ரி மற்றொரு மாடல் என்பதால் கூடுதலாக 100 ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து விக்ரம் சௌத்ரியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

​கடைக்குள் இருந்த மற்றொரு நபர் உதவியுடன் அந்தத் தாக்குதல்காரரை வெளியே தள்ளிவிட்டு, காயமடைந்த விக்ரம் சௌத்ரியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு டயர்களை எரித்துப் போராட்டம் நடத்தியதால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் நிலவியது. வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள அந்த நபரைக் கண்டுபிடிக்கத் தீவிர வலைவீசித் தேடி வருகின்றனர்.