சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ் பயிற்சியில் கலந்து கொண்ட இருவர், பயிற்சியிலேயே காதலித்து, பின்னர் பெற்றோர், நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மவுனிகா, தனது மருத்துவப் படிப்பை முடித்த பிறகு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று 2022-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (LBSNAA), ஐ.ஏ.எஸ் பயிற்சியில் சேர்ந்தார்.

இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த யுவராஜ் மர்மத், சிவில் இன்ஜினியரிங் முடித்த பின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (IOCL) வேலை பார்த்து வந்தார். பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்து, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, மவுனிகாவுடன் சேர்ந்து அதே ஆண்டில் பயிற்சியில் சேர்ந்தார்.

பயிற்சியின் போது இருவரும் பழகி வந்த நட்பு, பின்னர் காதலாக மாறியது. கடந்த 2023ம் ஆண்டு, பயிற்சி நடைபெறிக் கொண்டிருந்த நேரத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பை சந்திக்க வேண்டாமென கருதி, அந்த திருமணத்தை பொதுவாக அறிவிக்கவில்லை.

தற்போது பயிற்சி முடிந்த நிலையில், இருவரும் பெற்றோர், நண்பர்கள், வகுப்பு தோழர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணமாக (registered marriage) எளிய முறையில் மீண்டும் திருமணம் செய்துள்ளனர்.

திருமண நிகழ்வுக்காக மலர் மாலைகள் மற்றும் இனிப்புகளுக்காக வெறும் ரூ.2,000 மட்டும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் எளிமையான திருமணம் சமூக வலைதளங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருவதோடு, பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.