மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 3 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 55% அளவில் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி, ஜூலை 1 முதல் 58% ஆக உயரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும், அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், அகவிலைப்படி திருத்தப்படுகிறது. இது, நாட்டின் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையிலாக கணக்கிடப்படுகிறது.

தொழிலாளர் பணியகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள 2025 ஜூன் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணிக்கை 145 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த 12 மாதங்களின் சராசரி குறியீட்டு எண்ணிக்கை 143.6 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே, அகவிலைப்படி 3% உயர்த்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

2025 ஜனவரியில் 55% ஆக வழங்கப்பட்ட அகவிலைப்படி, கடந்த மாதங்களில் நிலவிய விலை உயர்வுகளால் மீண்டும் திருத்தப்பட உள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான விலைக் குறியீட்டு மதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து, கடந்த ஜூனில் 58.17 ஆக உயர்ந்தது.

இந்த உயர்வு, ஜூலை 1 முதல் அமலாகும் வகையில் நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகவிலைப்படி உயர்வு, மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இதனுடன், பயணப்படி (TA) மற்றும் வீட்டு வாடகைப் படி (HRA) ஆகியனவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மத்திய அரசின் இந்த முடிவைத் தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.