தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட கார்த்தி சிதம்பரம் எம்.பி., நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

பொள்ளாச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியைப் பாராட்ட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார். இதன் விளைவாக, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.”

“போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது என இரு கோணங்களில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். வெறும் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கையினால் மட்டும் இதனை முறியடிக்க முடியாது. போலீஸார் தங்களது ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்துவதுடன், இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் பதிலளிக்கையில்: “தேர்தலில் நடிகர் விஜய்யின் கட்சிக்குக் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த வாக்குகள் அவருக்கு வெற்றியைத் தேடித்தருமா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். தற்போதைக்கு அது ஒரு பெரிய ‘ரசிகர் மன்றமாக’ மட்டுமே உள்ளது. அந்த ரசிகர் மன்றம் ஒரு ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சியாக மாறுமா என்பதை வரும் காலம்தான் தீர்மானிக்கும்” என்றார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி கிடையாது எனவும் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் நேற்று கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.