தமிழக அரசியலில் தற்போது நிலவும் சூழலில், மக்கள் புதிய மாற்றத்தை விரும்புவதாகவும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்பும் ஆளுமையாக விஜய் உருவெடுத்துள்ளதாகவும் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தற்போதைய அரசியல் களம் குறித்து கூறியதாவது: “தமிழகத்தில் உள்ள இரு பெரும் திராவிடக் கட்சிகளும் வேண்டாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். புதிய கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே சாமானிய மக்களின் விருப்பமாக உள்ளது. தேர்தல் களத்தில் மக்கள் அளிக்கும் எழுச்சியான வரவேற்பைப் பார்க்கும்போது, தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்தைப் பிடித்து, விஜய் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்பது உறுதி.”

உலகளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் குறித்த ஆய்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் நரேந்திர மோடியை விடவும் விஜய் முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார். “மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், விஜய்யின் செல்வாக்கு இப்போது உச்சத்தில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு மாற்றுக்கட்சியிலிருந்து ஏராளமானோர் தவெக-வில் இணைவதை நீங்கள் நேரில் காண்பீர்கள்,” என்றார்.

எதிர்காலக் கூட்டணி குறித்து செங்கோட்டையன் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்காலத்தில் தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவார்கள்,” என்று அவர் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய கருத்தை விமர்சித்த அவர்: “எடப்பாடி பழனிசாமி நூறாண்டு காலம் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என உதயநிதி கூறுகிறார் என்றால், திமுகவும் அதிமுகவும் ரகசியமாக இணைந்து செயல்படுகின்றன என்றுதான் அர்த்தம். இவர்களின் நாடகத்தை மக்கள் உணர்ந்துவிட்டனர். மேலும் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓய்வூதியத் திட்டம் பற்றி அறிவிப்பது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியே தவிர வேறில்லை,” எனச் சாடினார்.