இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எச். வினோத், முதல்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். தீவிர அரசியலில் கால்பதித்துள்ள விஜய்யின் கடைசித் திரைப்படம் இது எனக் கூறப்படுவதால், இப்படத்திற்கு சினிமா வட்டாரத்தைத் தாண்டி அரசியல் களத்திலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சமீபத்தில் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. தற்போது டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதிலுள்ள அதிரடி வசனங்கள் மற்றும் அரசியல் நெடிமிக்க காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
ஜனநாயகன் டிரைலர் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறியதாவது: “ஜனநாயகன் டிரைலர் மிக எழுச்சியாகவும், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் உள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. வரும் 9-ம் தேதி திரைப்படம் வெளியான பிறகு, மக்கள் வியக்கும் வகையில் இதன் தாக்கம் இருக்கும்” என்றார்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளார். இவர்களுடன் பாபி தியோல், பிரியாமணி, கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியுள்ளது.
மேலும் எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் நோக்கர்களும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மேலும் பொங்கலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தில் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் இணைவார்கள் என்றும் கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் அப்போது தெரியும் எனவும் ஏற்கனவே செங்கோட்டையன் கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
