தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க ராணுவம் இன்று அதிகாலை அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வெனிசுலா தலைநகர் கராகஸில் இன்று அதிகாலை 2 மணியளவில் அமெரிக்க விமானப்படை சுமார் 7 இடங்களில் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் வெனிசுலா ராணுவத் தளங்களுக்கு அருகில் இருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. நகரின் முக்கியப் பகுதிகள் இருளில் மூழ்கிய நிலையில், நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”
வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்குள் பெருமளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் டிரம்ப் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வந்தார்.
முன்னதாக, வெனிசுலா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படை, போதைப்பொருள் கடத்தி வந்ததாகக் கூறி சில கப்பல்களைச் சுட்டு வீழ்த்தியது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்த மதுரோ, “அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம்” என சவால் விடுத்திருந்தார்.
இந்த மோதல் முற்றிய நிலையில், தற்போது அமெரிக்கா நேரடியாக வான்வழித் தாக்குதலை நடத்தி அந்நாட்டு ஆட்சியைக் கவிழ்த்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.
மேலும் இந்த நிலையில் அதிபர் ட்ரம்பு சிறைப்பிடித்த மதுரோ யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம். பேருந்து ஓட்டுனராக இருந்து தொழிற்சங்க தலைவராக பதவி வகித்த மதுரோ கடந்த 1999 ஆம் ஆண்டு வெனிசுலாவின் அரசவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
ஐக்கிய சோசலிக் கட்சி சார்பில் கடந்த 2000 ஆண்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இப்போதைய அதிபர் ஹூகோ சாவெஸ் உடன் நெருக்கம் காட்டினார். 2006 ஆம் ஆண்டு முதல் வெளியுறவு அமைச்சராக பணியாற்றிய மதுரோவை ஹூகோ துணை அதிபராக நியமித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு அதிபர் ஹூகோ மரணமடைந்த நிலையில் அதிபராக மதுரோ பதவி ஏற்றார். மேலும் அப்போது முதல் தற்போது வரை வெனிசுலா அதிபராக அவர் இருக்கும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் காரணமாக தான் பதவியேற்றது முதல் அவரை சரணடைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது ட்ரம்ப் அவரை சிறை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
