கனடாவில் வீடு சுத்தப்படுத்தும் வேலைக்குச் சென்ற பெண் ஒருவருக்கு, அந்த வீட்டு உரிமையாளர்கள் வைத்த வினோத சோதனை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை காலை வேலைக்கு வந்த டெவன் என்ற அந்தப் பெண்ணிடம், ஒரு ஜாடியையும் அதனுடன் ஒரு குறிப்பையும் வீட்டு உரிமையாளர்கள் விட்டுச் சென்றிருந்தனர்.

அதில், “வீடு முழுவதும் 100 சிறிய ரப்பர் வாத்துகளை ஒளித்து வைத்துள்ளோம்; நீங்கள் வேலையைச் சரியாகச் செய்கிறீர்களா என்பதை அறியவே இந்த சோதனை, வேலையை முடிக்கும்போது அனைத்து வாத்துகளையும் இந்த ஜாடியில் போடவும்” என எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பீரோவுக்குப் பின்னால், செடித் தொட்டிகளுக்கு அடியில் என மூலை முடுக்கெல்லாம் தேடி 76 வாத்துகளை மீட்ட நிலையில், “உங்களுக்காக என்னால் ‘வாத்து விளையாட்டு’ விளையாட முடியாது” எனத் தெறிக்கவிடும் மெசேஜ் அனுப்பிவிட்டு வேலையை விட்டு அதிரடியாக வெளியேறினார்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வரும் நிலையில், தொழிலாளியின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் இத்தகைய செயல் அநாகரீகமானது என நெட்டிசன்கள் பலரும் வீட்டு உரிமையாளர்களைக் கண்டித்து வருகின்றனர்.